ஐபிஎல் தொடரை இந்த மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டவட்டம்? – வெளியான அண்மை செய்தி!
இந்த நாட்டுடன் நடக்கவிருந்த தொடரை ஒத்திவைத்துவிட்டு ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் மார்ச் மாதம் இறுதியில் துவங்கி மே மாதம் இறுதி வாரம் வரை நடக்கவிருந்தது. ஆனால் உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்று தாக்குதல் காரணமாக முதல்கட்டமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், நாடெங்கும் ஊரடங்கு இரண்டாம் கட்டமாக மே மூன்றாம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
வைரஸை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டும் திட்டமிட்டபடி நடைபெறாமல் சிறிது காலம் தள்ளி செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஆடவிருந்தது. ஆனால் தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவற்றை ரத்து செய்ய வாய்ப்பிருக்கின்றது.
இதனை ஐபிஎல் நிர்வாகம் பயன்படுத்திக்கொண்டு அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஐபிஎல் தொடர் தடைபட்டதால் பல்லாயிரம் கோடி ரூபாய் பிசிசிஐ தரப்பிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை சரிசெய்ய இந்த இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் தொடரை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்கின்ற நோக்கில் இந்த திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.