கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து 29 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததன் மூலம் மகேந்திர சிங் தோனியின் பல வருட சாதனையை முறியடித்திருக்கிறார் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியை ஐபிஎல் வரலாற்றில் எவராலும் மறக்க முடியாது என்கிற அளவிற்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார் கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரிங்கு சிங்.

இப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 180 ரன்கள் எட்டுவதே கடினம் என்று இருந்தபோது, கடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள் விளாசினார் விஜய் சங்கர். இதன் மூலம் 204 ரன்களை எட்டியது குஜராத் அணி.
205 ரன்கள் எனும் இமாலய இலக்கை குஜராத் அணியின் சொந்த மைதானத்தில் எட்டுவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று பார்க்கப்பட்டது. ஆனாலும் கொல்கத்தா அணியினர் முதல் இரண்டு விக்கெட் போனபிறகும் மனம்தளரவில்லை.

கேப்டன் நித்திஷ் ரானா(45 ரன்கள்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு வெறும் 55 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் வெறும் 40 பந்துகளுக்கு 83 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.
17ஆவது ஓவரில் ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்தார். இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதே முடியாத காரியம் என்று பார்க்கப்பட்டது.

களத்தில் நான் இன்னும் இருக்கிறேன் என்று காட்டிய ரிங்கு சிங், இருபதாவது ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது முதல் பந்தில் உமேஷ் யாரு சிங்கிள் எடுத்துக் கொடுக்க, கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசினார். என்னாலும் முடியும் என்று உலகிற்கு காட்டி இருக்கிறார் ரிங்கு சிங்.
இறுதியில் அசத்தலான வெற்றியை பெற்றது கொல்கத்தா அணி. கடைசி ஓவரில் 29 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனியின் ஏழு வருட சாதனையை முறியடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி, 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 23 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து ரைசிங் புனே சூப்பர் ஜேயின்ட்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்ததே இதுவரை கடைசி ஓவரில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது ரிங்கு சிங் இதனை முறியடித்து 29 ரன்கள் சேஸ் செய்து காட்டி வரலாறு படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்
1. 29 ரன்கள் – கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி – 2023
2. 23 ரன்கள் – ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி – 2016
3. 22 ரன்கள் – குஜராத் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி – 2022