வருகிற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ரிங்கு சிங் எடுக்கப்பட உள்ளார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது. அத்துடன் புஜாரா, உமேஷ் யாதவ் டெஸ்டுக்கு ஏன் எடுக்கப்படவில்லை? என்பது குறித்து அப்டேட் வந்திருக்கிறது.
இந்திய அணி வருகிற ஜூலை மாதம் இரண்டாவது வாரம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகளை முதலாவதாக விளையாடுகிறது. பின்னர் மூன்று ஒருநாள் போட்டிகள், அதைத் தொடர்ந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடுகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. டெஸ்ட் போட்டிகளில் ருத்துராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் எடுக்கப்பட்டிருக்கிறார்.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்திருக்கிறது. புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்கிற முடிவிலும் பிசிசிஐ இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.
டி20 அணியில் ஜெய்ஸ்வால் ருத்துராஜ் மற்றும் ரிங்கு சிங் ஆகிய வீரர்களை எடுக்கப்படுவதற்கான அனேக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது இதில் ரிங்கு சிங் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார். இதை பிசிசிஐ மூத்த அதிகாரி பேசிய பேட்டியில் தெரியவந்திருக்கிறது.
டெஸ்ட் அணியில் சித்தேஸ்வர் புஜாரா எடுக்கப்படவில்லை. இது தற்காலிக நீக்கமா? அல்லது புறக்கணிப்பா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. இதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்ட தகவல்களின்படி, புஜாரா இடைவிடாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுத்து, பின்னர் விளையாட வைக்கலாம் என்கிற முடிவிற்கு வந்துள்ளனர். அதனால் தான் எடுக்கப்படவில்லையாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடிய உமேஷ் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு எடுக்கவில்லை. அவரது நீக்கத்திற்கான காரணம், உமேஷ் யாதவ் கால் பகுதியில் சிறிய அசவுகரிகம் இருக்கிறது. அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். குணமடைந்ததும் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.