32 பந்துகளில் அசுர வேக சதம்… ரோஹித் சர்மா சாதனையை தகர்த்தார் ரிஷப் பண்ட்
சையத் முஸ்தாக் அலி டிராபியில், ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பண்ட், அசுர வேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.
இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் கோப்பையை கைப்பற்றவும் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரின் ஏலத்தையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த தொடரின் இன்றைய லீக் போட்டியில் காம்பீர் விளையாடும் டெல்லி அணி ஹிமாச்சல் பிரதேசத்தை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹிமாச்சல பிரதேச அணிக்கு நிகில் காங்க்டா 40 ரன்களும், அந்த அணியின் கேப்டன் பிரசாந்த் சோப்ரா 30 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் டெல்லி அணிக்கு 145 ரன்களை வெற்றி இலக்காக ஹிமாச்சல் அணி நிர்ணயித்தது.
இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்கம் கொடுத்த ரிஷப் பண்ட் மற்றும் காம்பீர் ஜோடி நேரத்தை வீணடிக்க விரும்பாமல் மளமள வென ரன் குவித்து 4.3 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது.
காம்பீர் நிதானமாக விளையாடி தொடங்கியதும் மறு முனையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி வேட்டை நடத்திய ரிஷப் பண்ட் 18 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஏழு பவுண்டரிகளுடன் முதல் அரைசதத்தையும், அடுத்த 14 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் அடுத்த அரைசதத்தையும் கடந்து அசத்தினார்.

இதன் மூலம் 32 பந்துகளில் டி.20 அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ரிஷப் பண்ட், டி.20 அரங்கில் அசுர வேக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் ரிஷப் பண்ட் 38 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து மிரட்டியதன் மூலம் 11.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்த டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு டி.20 தொடரில் 35 பந்துகளில் சதம் அடித்த இந்திய அணியின் ரோஹித் சர்மாவின் சாதனையையும் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.