ரிஷப் பண்ட் இனி செட் ஆக மாட்டார்; முன்னாள் வீரர் சொல்கிறார்
ரிஷப் பந்த் நான்காவது இடத்தில் விளையாடாமல் வேறு இடத்தில் விளையாட வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. இதில் ஒரு போட்டியில் இந்தியாவும் மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றிப் பெற்றதால் தொடர் சமனில் முடிந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியில் நான்காவது இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கினார். இவர் இரண்டு ஆட்டங்களில் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார். எனவே இவரின் ஆட்டத்தின் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டத்திற்கு நான்காவது இடம் சரிப்பட்டு வரவில்லை. ஆகவே இவர் 5ஆவது அல்லது 6ஆவது இடங்களில் களமிறங்க வேண்டும். ஏனென்றால் அந்த இடங்களில் களமிறங்கும் போது இவர் தொடக்க முதல் அதிரடியாக விளையாடலாம். அத்துடன் ஆட்டத்தின் சூழலும் அதற்கு சரியாக அமையும்.

தற்போது உள்ள அணியில் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு ஸ்ரேயஸ் ஐயர் அல்லது ஹர்திக் பாண்ட்யா தகுதியாக இருப்பார்கள். இவர்களின் ஆட்டத் திறன் இதற்கு ஏதுவாக அமையும். மேலும் ரிஷப் பந்த் தோனி போன்ற பெரிய வீரரின் இடத்தை நிரப்ப முற்படுவதால், ரிஷப் பந்த் மீது அதிக நேருக்கடி இருக்கும். ஏனென்றால் தோனி இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பல சாதனைகளை புரிந்துள்ளார். எனவே அவரின் இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்பிவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.