மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய இளம் வீரர் ரிஷப் பண்ட்டை இந்த போட்டியில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான நாதன் லயோன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது சற்று கடினமாகவே பார்க்கப்படும் நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான நாதன் லயோன், ரிஷப் பண்ட்டிற்கு பந்துவீச ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாதன் லயோன் பேசுகையில், “ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவருக்கு என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சி செய்தேன். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வெடிப்பு உள்ளது. அதை நோக்கியே பந்து வீச முயற்சி செய்வேன். ரிஷப் பண்ட் எனது பந்தை எப்போதுமே அடித்து விளையாடக்கூடியவர். அவருக்கு பந்து வீசுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு பந்து வீசுவது சிறந்த போட்டியாக இருக்கும்’’ என்றார்.

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியையே சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ரிஷப் பண்ட் திடீரென தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை காட்டினார். இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் பலர் சொதப்பிய நிலையிலும் ரிஷப் பண்ட் தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.