டெஸ்ட் போட்டியில் லாராவின் 400 ரன்கள் சாதனையை ரோகித் ஷர்மா நிச்சயம் முறியடிக்க கூடியவர் என வார்னர் முச்சதம் அடித்த பிறகு பேட்டியளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது மற்றும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் வார்னர் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 335 ரன் விளாசி, அடிலெய்டு மைதானத்தில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் திடீரென டிக்ளேர் செய்து அதிர்ச்சி அளித்தார்.
டிம் பெயின் இந்த முடிவால் வார்னரின் சாதனை வாய்ப்பு நடக்காமல் போனது. சமூக வலைத்தளங்களில் டிம் பெய்னை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கூடுதலாக 30 முதல் 40 நிமிடங்கள் கொடுத்திருந்தால், அணியின் வெற்றிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து வார்னர் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்று கேட்டால், நிச்சயமாக அது இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தான் என்பேன். தொடக்க வீரரான அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் 400 ரன்னை விரைவாக எட்டி விடலாம் என நினைக்கிறேன்.
ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியபோது வீரேந்திர சேவக் அளித்த டிப்ஸ் மிகவும் உதவிகரமாக உள்ளன. உங்களால் டி20 போட்டியை விட டெஸ்ட் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்றார். அவரது வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கை அளித்தன” என வார்னர் கூறியுள்ளார்.