ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்க வேண்டும்; சூர்யகுமார் யாதவ் கோரிக்கை
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்கி பழையபடி மாஸ் காட்ட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பங்கேற்ற 7 போட்டிகளில் 2 மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தனது ஓபனிங் இடத்தை விட்டு, போட்டியின் தன்மைக்கு ஏற்ப மாற்றி மாற்றி களமிறங்கி வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததடுத்த போட்டிகளில், ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,‘ரோகித் சர்மா மீண்டும் ஓபனிங் வீரராக களமிறங்குவது அவர் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவாகும். ஆனால் எந்த இடத்தில் அவர் களமிறங்கினாலும், அந்த இடத்துக்கு ஏற்ப ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் ரசிகர்களுக்காக மீண்டும் துவக்க வீரராக களமிறங்கி அதிக பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ என்றார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.
தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் இந்த இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது எதிர்பார்க்கப்படுகிறது.