ரோஹித் சர்மாவிற்கு பதில் வேறு யாராவது இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் பதவி விலகலுக்கு பிறகு இந்திய அணியின் மூன்றுவிதமான தொடரிலும் கேப்டன் பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா, கேப்டன் பதவி ஏற்ற பிறகு அனைத்து போட்டிகளிலுமே பங்கேற்க முடியவில்லை.
காயம்,ஓய்வு என பல்வேறு விஷயங்களால் இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் ரோகித் சர்மா தற்போது கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இவர் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இதன் காரணமாக இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் பரிதவித்து வருகிறது.
இந்த நிலையில் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் இருந்து எடுத்து வேறு யாரிடமாவது ஒப்படைத்தால் வேலைப்பளு குறைந்து ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் பேசுகையில், “டி20 தொடரில் இந்திய அணியை வழி நடத்துவதற்கு வேறு யாராவது ஒருவரை பிசிசிஐ மனதில் வைத்திருந்தால், ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரை கேப்டனாக்க வேண்டும், இதனால் ரோகித் சர்மாவின் வேலைப்பளு குறையும் இதன் காரணமாக அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியும், மேலும் இதனால் ரோஹித் சர்மா டி20 தொடரை பற்றி கவலைப்படாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட முடியும், அப்படி இல்லாமல் மூன்று விதமான தொடரிலும் இந்திய அணியை ஒருவர்தான் வழிநடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்திருந்தால் அதற்கு ரோஹித் சர்மா தான் சரியான நபர் என்று சேவாக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.