சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கிறார் ரோகித் சர்மா.
இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித போட்டிகளிலும் அசைக்க முடியாது துவக்க வீரராக திகழ்ந்து வருகிறார் ரோகித் சர்மா. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 சதங்கள் விளாசி, ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அடுத்ததாக, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் கேப்டன் விராத்கோலி இருக்கிறார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ரோகித் சர்மா களமிறக்கப்பட்டார். முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்சிலும் சதமடித்தார். மூன்றாவது போட்டியில் முதன் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், 19 சிக்ஸர்கள் விளாசினார்.
இதுவரை 32 டெஸ்டில் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் சர்மா 52 சிக்சர் அடித்துள்ளார். மேலும், 218 ஒருநாள் போட்டிகளில் 232 சிக்ஸர்களும், 101 டி–20 போட்டிகளில் 115 சிக்ஸர்கள் என சர்வதேச அரங்கில் மொத்தம் 399 சிக்சர் அடித்துள்ளார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி–20 போட்டியில் இவர் ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச அரங்கில் 400 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்திய வீரர்கள் மத்தியில், ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக 359 சிக்ஸர்களுடன் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச அரங்கில் 400 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில்,

- கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) – 534 சிக்ஸர்கள்
- ஷாஹித் அப்ரிதி(பாகிஸ்தான்) – 476 சிக்ஸர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரோகித் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில், 400 சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை ரோகித் சர்மா பெறுவார்.