கேப்டனாக இருந்துகொண்டு ரோகித் சர்மா இப்படி செய்யக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
ரோகித் சர்மா-விற்கு நடந்து முடிந்த இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் நன்றாகவே அமைந்தது. ஆனால் அவருக்கு கிடைத்த துவக்கத்தை சரியாக பயன்படுத்தி, அதை மூன்று இலக்க ரன்களாக மாற்ற முடியவில்லை.
முதல் போட்டியில் 67 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து சென்றார்.
2012ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சதம் அடித்துவந்த ரோகித் சர்மா, கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அனுபவமிக்க வீரர் இப்படி திணறி வருவது அணிக்கு சற்று பின்னடைவாகவே இருக்கிறது.
கிட்டத்தட்ட 50 ஒருநாள் போட்டிகளுக்கும் மேல் சதமடிக்கவில்லை என்பதும் தற்போது கவலைக்குறியதாக உள்ளது. விராட் கோலி இரண்டரை வருடமாக சதமடிக்காமல் இருந்தது அணிக்கு எவ்வளவு பெரிய பின்னடைவாக இருந்தது என்பதை பார்த்தோம்.
அதுபோல ரோகித் சர்மாவின் இந்த பார்ம் இந்தியாவிற்கு பின்னடைவாக இருந்திடக்கூடாது மற்றும் கேப்டனாக இருக்கிறார் அது அணி வீரர்களை பாதிக்கலாம் என்கிற கோணத்தில் கருத்து தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
“இதை நாம் பேசியாக வேண்டும் இரண்டரை வருடமாக விராட் கோலி சதம் அடிக்காமல் இருந்தார். இப்போது அதுபோல ரோகித் சர்மாவின் நிலை சென்று கொண்டிருக்கிறது. உடனடியாக இதை கவனித்து அவர் செயல்பட வேண்டும். 50-60 இன்னிங்ஸ்கள் செஞ்சுரி அடிக்கவில்லை. இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒன்று இரண்டு போட்டிகள் போல இதை பொறுத்துக் கொள்ளவும் முடியாது.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கலக்கிய ரோகித் சர்மா ஆடிய ஆட்டத்தில் இருந்தது மற்றும் இப்போது மிஸ் ஆவது ஒன்று மட்டும் தான். அது அவரது அணுகுமுறை. அதிலும் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற பிறகு, தனது தரத்திற்கு குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடாது. துவக்க வீரராக களம் இறங்கும் இவர் கூடுதல் பொறுப்புடன் விளையாடி சக அணி வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக நிற்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் அடிக்கடி ஆட்டமிழப்பது தவறு.” என சுட்டிக்காட்டினார்.