நீங்க வேற லெவல்; நியூசிலாந்து வீரர்களுக்கு ரோஹித் சர்மா பாராட்டு
அண்டர் 19 உலக கோப்பையில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் செயல், கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் அண்டர் 19 உலக கோப்பை நடந்துவருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்ற வீரர்கள் அனைவருமே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டிருக்க, மறுமுனையில் நான்காம் வரிசை வீரரான கிர்க் மெக்கென்சி மட்டும் நிலைத்து நின்று அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தார்.

99 ரன்கள் அடித்த மெக்கென்சிக்கு துரதிர்ஷ்டவசமாக இன்னிங்ஸின் 43வது ஓவரில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட, அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். அவரால் நடக்கக்கூட முடியாததால் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார்.
சதத்திற்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், காயம் காரணமாக 99 ரன்னில் களத்தை விட்டு வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட பின்னர், கடைசியாக வேறு வழியின்றி மெக்கென்சி களத்திற்கு வந்தார். ஆனால் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இன்னிங்ஸ் முடிந்து களத்தை விட்டு வெளியேறும்போது, மெக்கென்சியால் நடக்க முடியவில்லை. நடக்க முடியாமல் வலியுடன் தட்டுத்தடுமாறி நடந்த மெக்கென்சியை, நியூசிலாந்து கேப்டன் டஷ்கோஃப் மற்றும் ஜோய் ஃபீல்டு ஆகிய இருவரும் தூக்கிச்சென்று பவுண்டரி லைனில் விட்டனர். நியூசிலாந்து வீரர்களின் இந்த செயல் ரசிகர்களையும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களையும் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
So good to see this #SpiritOfCricket at its best. https://t.co/qzUZjEuRt5
— Rohit Sharma (@ImRo45) January 30, 2020
இதையடுத்து 239 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 153 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், 9 மற்றும் 10ம் வரிசை வீரர்களான ஃபீல்டு மற்றும் கிறிஸ்டியன் கிளார்க்கும் இணைந்து எஞ்சிய 86 ரன்களை அடித்து நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர்.