ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா, முதல் போட்டியில் 38 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9630 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 16 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்னர் 16 வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்ட் ஆடம் கில்கிறிஸ்ட் 9,619 ரன்களுடன் இருந்தார். இவர் 279 இன்னிங்ஸ்களில் 16 சதங்கள் மற்றும் 55 அரைசதங்கள் அடித்திருந்தார். அவரது சராசரி 35.89 ஆகும். தற்போது கில்கிறிஸ்ட்டை பின்னுக்கு தள்ளி, ரோகித் சர்மா 16 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ரோகித் சர்மா இதுவரை 232 இன்னிங்ஸில் விளையாடி 9,630 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி 48.63 ஆகும். மூன்று இரட்டை சதங்கள் உட்பட 29 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும் அடித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் மத்தியில், ஆறாவது இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இருக்கின்றனர்.
தோனியின் சாதனை முறியடிப்பு
இலங்கை அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் ரோகித் சர்மா இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் மகேந்திர சிங் தோனியின் அதிக சிக்ஸர் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய மைதானங்களில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.
இந்திய மைதானங்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:
1. ரோகித் சர்மா – 125 சிக்ஸர்கள்
2. தோனி – 123 சிக்ஸர்கள்.
சுப்மன் கில் அசத்தல்
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் மற்றொரு இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து, ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் மிகவும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.