தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்மித்தின் சராசரியை முந்தியிருக்கிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதலாவதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி, ஆஸ்திரேலிய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளின் வெற்றிக்கு எடுத்துச்சென்ற ஸ்டீவ் ஸ்மித் ஏழு இன்னிங்ஸ்களில் 774 ரன்கள் குவித்து 110.57 சராசரியை கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது ஆடி வரும் இந்திய அணியில் முதல் முறையாக துவக்க வீரராக முன்னேற்ற ரோகித் சர்மா, முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார்.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றார். இரண்டு சதம், ஒரு இரட்டை சதம் என மொத்தம் ஐந்து இன்னிங்ஸ்களில் 529 அடித்திருக்கிறார். இதன்மூலம் இவரது சராசரி 132.25 ஆகும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சராசரி கொண்டவர்கள் (இந்தியா-தென்னாபிரிக்கா தொடர் வரை):
#1 ரோகித் சர்மா -132.25
#2 ஸ்டீவ் ஸ்மித் – 110.57
#3 பீஜே வாட்லிங் – 91.50
#4 காலின் டி கிராந்டோம் – 83.00
#5 அஜிங்க்யா ரஹானே – 81.16
தற்போது இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியை பார்க்கையில், முதல் இன்னிங்சில் ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தால் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதனையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 9/2 என தடுமாறி வருகிறது. டு பிளேஸிஸ், ஹம்ஸா இருவரும் களத்தில் நிற்கின்றனர். தற்போது வரை இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.