இந்த இருவரும் ஆடுவதை நான் வியந்து பார்த்துக்கொண்டிருப்பேன்; அது இந்தியர்கள் இல்லை – மனம் திறந்த ரோகித்!
இவர்கள் இருவரும் ஆடுவதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் என மனம் திறந்து பேசியுள்ளார் ரோகித் சர்மா.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில நாடுகளில் வைரஸ் தாக்கம் குறைவதால் வீரர்கள் மெல்லமெல்ல பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், இந்தியாவில் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. ஆதலால், வீரர்களும் பயிற்சிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பங்கேற்ற ரோகித் சர்மா கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்தும் தனது கருத்தினை வெளியிட்டார். அவர் கூறுகையில்,
“ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எளிதாக இருக்காது. அதேநேரம், பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்பதால் சவாலாக இருக்கும். எனக்கு ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் ஆடுவதை பார்க்க பிடிக்கும். அதேபோல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஆடுவதை பார்க்கவும் எனக்கு பிடிக்கும்.”
தோனி குறித்து பேசிய அவர், “தோனி மிகப்பெரிய ஜாம்பவான். அவருடன் ஆடியது மறக்க முடியாத ஒன்று.” என்றார்.
அதேபோல, ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை பற்றி பேசிய அவர், “நான் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை இரண்டிலும் ஆடுவதற்கு விரும்புகிறேன். ஐபிஎல் எனக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கும். அதைக்கொண்டு உலகக்கோப்பையில் நன்கு செயல்பட இயலும்.
ஐபிஎல் தொடர் நடந்தால், உலககோப்பைக்கு தயாராக போதிய நேரம் கிடைக்காது என்பதால், வீரர்கள் அதற்க்கு முன்னதாக திட்டமிட்டு தயாராக வேண்டும். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே முக்கியம் என்பேன்.” எனவும் பேசினார்.
விராட்கோலி குறித்து கேட்டதற்கு, வெறும் சிரிப்பு எமோஜி மட்டும் காட்டி, நீங்களே கண்டுபிடியுங்கள் என கூறிவிட்டார். தோனியைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என கேட்டதற்கு, “ஜாம்பவான்” என குறிப்பிட்டார்.