சர்பராஸ் கான், ரிங்கு சிங்கிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? புதிய விளக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா
சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் பலர் இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸின் டோமினிகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோருக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனிலேயே இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டிக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து மிக சிறப்பாக விளையாடி வரும் போதிலும், சர்பராஸ் கான் போன்ற சில வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்தான கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “ஜெய் ஸ்வால் மற்றும் ருத்ராஜ் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கின்றனர் . இது அவர்களது தொடர்ச்சியான கடின உழைப்பிற்கு கிடைத்து வெற்றி . நாங்கள் நீண்ட நாட்களாகவே இடது கை துவக்க வீரர் ஒருவருக்காக காத்திருந்தோம். தற்போது ஜெய்ஸ்வால் எங்களுக்கு கிடைத்துள்ளார். அவர் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார் என நம்புகிறேன். ஒரு அணியில் 15 முதல் 16 வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். இதன் காரணமாகவே சில திறமையான வீரர்கள் இடம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அனைத்து வீரர்களுக்கும் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .ரிங்கு சிங் மற்றும் சர்ப்ரைஸ் கான் ஆகியோரும் அவர்களுக்கான நேரம் வரும் போது நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.