இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நியூஸிலாந்துக்கு எதிராக இன்று நடந்த டி20 போட்டியின் போது புதிய மைல்கல்லை எட்டினார்.
ஹேமில்டனில் இன்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்பு 179 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து, நடந்த சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி 17 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரு சிக்ஸர்களும், ராகுல் ஒரு பவுண்டரியும் அடிக்க 19 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டினார். தொடக்க வீரராக டி20,ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 10 ஆயிரம் ரன்களைச் சேர்த்த 4-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
இந்திய வீரர் ரோஹித் சர்மா மூன்று பிரிவுகளிலும் சேர்த்துத் தொடக்க வீரராக 219 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 10 ஆயிரத்து 10 ஆயிரத்து 117 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளார். தொடக்க வீரராக ரோஹித் சர்மா 50.33 சராசரி வைத்துள்ளார்.

இதற்கு முன் இந்த சாதனையை சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகிய 3 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே வைத்திருந்தார்கள் குறிப்பிடத்தக்கது.