இந்திய அணியில் ஏற்கனவே விராட் கோலி – ரோகித் சர்மா இடையே பிளவு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ரோகித் சர்மா.
இந்திய அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா திடீரென அன்-பாலோ செய்திருக்கிறார்.
ஏற்கனவே இந்திய அணியில் ரோகித் மற்றும் விராத் கோலி இருவருக்கும் இடையே பிளவு இருக்கிறது என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்நிலையில், ரோகித் சர்மாவின் இந்த செயல் விராத் கோலிக்கும், ரோகித்-க்கும் இடையே பிளவு இருப்பதையும், உலக கோப்பை அரையிறுதி வெளியேற்றத்திற்கு பிறகு இந்த பிளவு மேலும் அதிகரித்து இருப்பதையும் உறுதி செய்யும் வண்ணம் அமைத்துள்ளது.
உலக கோப்பை தொடரின் நடுவே ரோகித் சர்மா கூறிய சில ஆலோசனைகளை விராத் கோலி நிராகரித்துவிட்டு, கோலிக்கு ஆதரவான சிலருக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்பட்டது.
மேலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இந்த இரண்டும் தான் இருவருக்கும் இடையே நடக்கும் பிளவிற்கு காரணம் என பேசப்படுகிறது.
இவர்கள் இடையிலான பிளவு குறித்து பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராயிடம் நேற்று கேட்டபோது, ‘இது நீங்களாக உருவாக்கும் கதை’ என்று சுருக்கமாக பதிலளித்தார்.
அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா விலகினாலும், விராட்கோலி, ரோகித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து தான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது