இலங்கை கேப்டனை மான்கெடிங் செய்த சமி, அதெல்லாம் வேண்டாம் சதம் அடித்துவிட்டு போகட்டும் என அவுட் அப்பீலை திரும்பப்பெற்றார் ரோகித் சர்மா. கடைசி ஓவரில் நடந்த சிறப்பான சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனக்கா பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்ததால், இந்திய அணியின் துவக்க ஜோடி இலங்கை பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு 100+ ரன்கள் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. சுப்மன் கில் 70 ரன்கள், ரோகித் சர்மா 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
அடுத்து உள்ளே வந்த விராட் கோலி தனது 45ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 87 பந்துகளில் 113 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 373 ரன்களை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு சேர்த்தது.
மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணைக்கு துவக்க வீரர் பதும் நிஷங்கா 72 ரன்களும் தனஞ்ஜெயா டி சில்வா 47 ரன்களும் அடித்தனர். 176 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இலங்கை அணிக்கு, உள்ளே வந்த கேப்டன் ஷனக்கா அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார். இலங்கை அணியை படுதோல்வியிலிருந்தும் காப்பாற்றினார்.
ஒரு கட்டத்தில் 200 ரன்கள் வருவதே கடினம் என இருந்தபோது, கேப்டன் விளையாடிய விதம் அசாத்தியமாக இருந்தது. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 88 பந்துகளில் 108 ரன்கள் அடித்தார்.
50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி. 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
கண்ணியம் காத்த ரோகித் சர்மா:
இலங்கை அணியின் கேப்டன் 98 ரன்கள் அடித்திருந்தபோது, கடைசி ஓவரை சமி வீசினார். அப்போது சமி பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னரே, இலங்கை கேப்டன் ஷனக்கா கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். இதை பார்த்துவிட்ட சமி, மான்கேடிங் செய்து அவுட் என நடுவரிடம் அப்பீல் செய்தார்.
உடனடியாக ரோகித் சர்மா தலையிட்டு முகமது சமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின்,அந்த அப்பீலை திரும்பப்பெற்றார். மூன்றாம் நடுவரிடம் சென்ற களத்தின் நடுவர், அந்த முடிவையும் திரும்ப பெற்றார்.
அதன்பின் ஷனக்கா, கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 108 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். போட்டி முடிந்தபின், ரோகித் சர்மாவின் இந்த கண்ணியமான செயலுக்காக அவரிடம் நன்றி கூறினார்.
Sportsman spirit shown by Shami-Rohit and let Dasun Shanaka to complete his 💯
🤝❤️#INDvsSL pic.twitter.com/r0SGohPs7v— 𝐬𝐡𝐚𝐤𝐢𝐛 (@ShakibSarafat) January 10, 2023