இவரைப் பார்க்கும் பொழுது கிரிக்கெட் வீரர் போன்றே இல்லை என இங்கிலாந்து அணியின் துவக்க வீரரை கடுமையாக சாடியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து, தொடரை இழந்துள்ளது. தற்போது 4-வது போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் தருவாயில் இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் இத்தகைய படுதோல்விக்கு அதன் துவக்க வீரர்கள் மோசமான துவக்கம் அமைத்துக் கொடுத்து வருவதே காரணம் என குறிப்பிடப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் வெறும் 55 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, இவரது சராசரி 12.75 ஆகும். அதன் பிறகு மூன்றாவது போட்டியில் அவர் வெளியில் அமர்த்தப்பட்டு, க்ராலி உள்ளே எடுத்து வரப்பட்டார்.
க்ராலி எதிர்பார்த்த அளவிற்கு துவக்கம் அமைத்துத் தரவில்லை. நல்ல துவக்கம் கிடைக்காததால் மற்றும் இங்கிலாந்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது தடுமாறுகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் முன்வைத்திருக்கிறார்.
“ரோரி பர்ன்ஸ் ஆடும் விதத்தை பார்க்கையில், அவர் கிரிக்கெட் வீரர் போன்று இல்லை. வேறு ஒரு வேலை செய்து கொண்டிருந்தவர் போல அவரது பேட்டிங் பிடிக்கும் விதம் இருக்கிறது. இங்கிலாந்து அணி சமீபகாலமாக கிரிக்கெட் விளையாடும் விதம் பலரையும் கிரிக்கெட் போட்டியை வெறுக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. அந்த நாட்டிற்கு என்னதான் ஆயிற்று? எதற்காக இது போன்ற வீரர்களை தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து உள்ளே வைத்திருக்கின்றனர் என்று புரியவில்லை?.” என கடுமையாக சாடினார்.
மேலும் பேசிய அவர், மற்றொரு துவக்க வீரர் ஹமீது மெதுவாக பந்துகளை எதிர் கொள்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களை அவர் மெதுவாக எதிர் கொள்வதால் நிறைய பந்துகளை தவறவிடுகிறார். எளிதில் போல்ட் ஆகி வெளியேறும் அளவிற்கு அவரது டைமிங் இருக்கிறது. இங்கிலாந்து அணி பெருத்த பின்னடைவை சந்தித்ததற்கு அதன் துவக்க வீரர்கள் தான் காரணம். ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மற்றும் ஹாரிஸ் இருவரும் எந்த அளவிற்கு துவக்கம் அமைத்துக் கொடுத்து வருகின்றனர் என இங்கிலாந்து வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.