யாருடைய ஓவரில் ஏழு சிக்ஸர் அடித்தாரோ அவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.
நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் அணிகள் மோதிய போட்டியின்போது, மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
ருத்துராஜ் 141 பந்துகளில் 220 ரன்கள் அடித்து அசத்தினார். விஜய் ஹசாரே தொடரில் இவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.
உத்திரபிரதேசம் அணியுடன் காலிறுதி போட்டியின் 49வது ஓவரில் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் (நோ-பால் சிக்ஸ் உட்பட) அடித்து 43 ரன்கள் குவித்தார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத புதிய சாதனையை படைத்தார்.
இளம் வீரரின் இந்த சாதனைக்காக உலகெங்கில் இருந்தும் பலர் பாராட்டினர். ஆனால் ருத்துராஜ் ஒரு படி மேலே சென்று, பந்துவீசிய பவுலரின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை உணர்ந்து கொண்டு அவருக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்.
“எனக்கு 49வது ஓவரை வீசிய சிவா சிங் மனநிலை எப்படி இருக்கும்? என்று இப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அன்று இரவு நிச்சயம் மனமுடைந்து காணப்பட்டிருப்பார். நான் நிகழ்த்திய சாதனைக்காக பெருமை கொள்கிறேன். அதேநேரம் எதிரணி வீரரின் மனநிலையையும் உணர்ந்து கொள்கிறேன்.
இப்படி நிகழ்ந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். சர்வதேச போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்தார். அதற்காக அவர் துவண்டுவிடவில்லை. அதிலிருந்து மீண்டு வந்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக எப்படி செயல்பட்டார் என்பதை நாம் அனைவரும் கண்டிருக்கின்றோம். அதை உதாரணமாக எடுத்துக்கொண்டு இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு தவறும் நமக்கு படிப்பினை. வருங்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்.” என்று அறிவுறுத்தார்.