சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான கடைசி மூன்று போட்டிகளில் அரைசதம் எடுத்து அசத்திய இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஸ்டைல் தனக்கு விராட் கோஹ்லியை நியாபகப்படுத்துவாக சென்னை அணியின் சீனியர் வீரர் டூபிளசி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக திகழ்ந்து வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட தொடரில் மிக மோசமாக விளையாடியது.
முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்த போட்டிகளில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. முதல் 11 போட்டிகளில் வெறும் மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் அணியாகவும் ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால் சென்னை அணி விளையாடிய கடைசி மூன்று போட்டிகளில் நிறைய சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டன, இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, வீரர்கள் களமிறங்கும் வரிசையையும் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் விளைவாக சென்னை அணியின் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கடைசி மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்து அசத்தினார், கெய்க்வாட்டின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி மூன்று போட்டிகளிலும் மிரட்டல் வெற்றி பெற்றது.
ருத்துராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான பேட்டிங்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து பேசியுள்ள சென்னை அணியின் சீனியர் வீரர் டூபிளசி, கெய்க்வாட்டின் பேட்டிங் ஸ்டைல் தனக்கு விராட் கோஹ்லியை நியாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டூபிளசி பேசுகையில், “இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஆனால், நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்களுடைய அணியில் விளையாடும் ருத்துராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்’’ என்றார்.
மேலும் ‘‘நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது. இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது. எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. முழுவதும் ஃபிட்டாகவே இருக்கிறேன். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன்’’ என்றார்.