ஒருநாள் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது; டூமினி கணிப்பு
இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் மற்றும் டி.20 தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரர் டூமினி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜே.பி. டுமினி, இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் மற்றும் டி.20 தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “இந்தியா, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நன்றாக விளையாடி வருவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிலும் அவர்கள் அப்படியே விளையாடியுள்ளனர். இப்போது, இந்திய அணியில் பல புதுமுகங்கள் வந்துள்ளன. ஆனால், அவர்களிடம் திறமைக்குப் பஞ்சம் இல்லை. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தபோதும், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரும் 20 ஓவர் தொடரும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.