கொரோனா காரணமாக பந்தில் எச்சில் தேய்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது, பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பதாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் துவக்கத்தில இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள், இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகின்றனர். இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்து வரும் நிலையில், பந்தில் எச்சில் தேய்ப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், பந்தை ஸ்விங் செய்யவே முடியவில்லை என இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜஸ்ப்ரிட் பும்ராஹ் பேசுகையில், “ஆடுகளம் சமநிலையாக இருந்தது. புதிய விதிமுறையால் பந்தை பளபளக்க செய்ய முடியவில்லை. இதனால் பந்தை ரிவர்ஸ் சுவிங் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டோம். கொரோனா காலம் என்பதால் இந்த விதிமுறை சரியானது. ஜோரூட் சிறப்பாக ஆடினார். சுழற்பந்தை அபாரமாக எதிர்கொண்டார். இலங்கையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கும் அதே திறமையுடன் ஆடினார். பாராட்டு எல்லாம் ஜோரூட்டை சாரும். அவர் சிறந்த இன்னிங்சை ஆடினார்” என்று தெரிவித்துள்ளார்.