ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய பிரசித் கிருஷ்ணாவிற்கு மாற்று வீரராக சந்திப் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அனைத்து அணிகளும் இதற்கான ஆயத்தப் பணியில் இறங்கிவிட்டனர். முதல் போட்டி வருகிற 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாகவும் சொந்த காரணங்களுக்காகவும் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி உள்ளனர். ஆர்சிபி அணிக்கு இந்த ஏலத்தில் 3.7 கோடிக்கு எடுக்கப்பட்ட வில் ஜாக்ஸ், சமீபகாலமாக இங்கிலாந்து அணிக்கு அபாரமாக செயல்பட்டு வந்தார். துரதிஷ்டவசமாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது படுகாயம் ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் ஆர்சிபி அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு விளையாடினார். அவரை ஆர்சிபி அணி ரிலீஸ் செய்தது. ஆகையால் ஏலத்தில் அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டித்தூக்கியது. இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல பார்மில் அவர் இருந்தார். ஆகையால் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, காயம் ஏற்பட்டு விலகினார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் சிசன்டோ மகாலா எடுக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ மீது பஞ்சாப் கிங்ஸ் அணி அதீத நம்பிக்கை வைத்திருந்தது. துரதிஷ்டவசமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எட்டு மாதங்களுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். இன்னும் அவருக்கு முழுமையாக குணமடையாததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கவில்லை. ஆகையால் ஜானி பேர்ஸ்டோவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த உள்ளூர் வீரர் மேத்யூ ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்த வருட பிபிஎல் சீசனில் அசத்தலாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆகையால் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் பிரசித் கிருஷ்ணா, உள்ளூர் போட்டியின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் சந்திப் சர்மா எடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைக்கவில்லை. ரிலீஸ் செய்தது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இதுகுறித்து சமூக வலைதளப்பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டும் இருந்தார் சந்தீப் சர்மா. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை எடுத்திருப்பது மிகப்பெரிய ஆறுதலை அவருக்கு கொடுத்திருக்கிறது.