இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு புஜாரா மற்றும் ரஹானே ஜோடி தான் முதல் காரணம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியை பெற்றிருக்கிறது. 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய போது புஜாரா மற்றும் ரஹானே இருவரும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், துவக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கினர். இதனால் அவர்கள் 60, 70 பந்துகளில் அரைசதம் கடந்தனர். வழக்கமாக 100 பந்துகளுக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டு அரைசதம் கடப்பது இவர்களது வாடிக்கை.
இந்நிலையில், ரஹானே-புஜாரா ஜோடி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது என பலரும் கருத்துக்களை பகிர்ந்து வந்தபோது, திடீரென ரகானே 58 ரன்களுக்கும், புஜாரா 53 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 163 ரன்கள் இருந்தபோது 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது.
நிலைத்து நின்று ஆடி வந்த இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்திய அணி பெருத்த பின்னடைவை சந்தித்தது. இதனால் பெரிதளவில் ரன்களை அடிக்க முடியாமல், 266 ரன்களுக்குள் சுருண்டது. அனுபவம் மிக்க இவர்கள், இப்படி பொறுப்பில்லாமல் விக்கெட்டை கொடுத்து செல்வது இந்திய அணியின் தோல்விக்கு முதன்மை காரணமாக இருக்கிறது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“இரண்டாவது இன்னிங்சில் புஜாரா மற்றும் ரஹானே ஆடிய விதம், அரைசதம் அடித்தது இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தது. அதேநேரம் இவர்கள் இருவரையும் இத்தனை போட்டிகள் தக்கவைத்ததற்கு, திரும்ப செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அனுபவிக்க இவர்கள் அரைசதம் கடந்த பிறகு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யாராவது ஒருவர் நிலைத்து நின்று விளையாடி, 80, 90 அல்லது சதம் அடித்திருக்க வேண்டும்.
எதிரணியில் எப்படி டீன் எல்கர் விக்கெட் கொடுக்காமல் நிலைத்து விளையாடினார்?, அதுபோன்ற ஒரு ஆட்டத்தை இவர்கள் இருவரில் ஒருவர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், பின்னர் வந்த வீரர்களும் தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து சென்றனர். ஆகையால் இருவர் ஆட்டமிழந்தது இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக இருக்கிறது.” என விமர்சித்துள்ளார்.