உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக விளையாடி வந்தபோதும் சர்ப்ராஸ் கான் ஏன் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்படவில்லை? என்பது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இளம் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். குறிப்பாக ரஞ்சிக்கோப்பையில் கடந்த மூன்று வருடங்களாக இவர் செயல்பட்டு வரும் விதம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 2019/20 ரஞ்சி சீசனில் 928 ரன்கள் குவித்தார். 2021/22 சீசனில் 982 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களில் முன்னிலையில் இருந்தார். நடந்து முடிந்த 2022/23 சீசனில் 656 ரன்கள் அடித்தார். இந்த 3 சேசங்களில் 2566 ரன்கள் குவித்துள்ளார். எவரும் இவ்வளவு ரன்கள் அடித்ததில்லை.
கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர் எடுக்கப்படவில்லை. அப்போதே ஏன் எடுக்கவில்லை என்கிற கேள்விகள் எழுந்தது. வருகிற ஜூலை மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகள் நடக்கிறது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் அணியிலும் சர்ப்ராஸ் கான் எடுக்கப்படவில்லை. இது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “இனி ரஞ்சிக்கோப்பையை யாரும் ஆடாதீர்கள். அதற்கு மதிப்பில்லை.” எனும் பகிரங்கமான விமர்சனத்த்தை முன்வைத்தார்.
இப்படியிருக்க, ஏன் சர்ப்ராஸ் கான் எடுக்கப்படவில்லை? என்பதை பிசிசிஐ மூத்த அதிகாரி கூறியுள்ளார். அவர் பேசியதாவது: “உள்ளூர் கிரிக்கெட்டை பிசிசிஐ தீவிரமாக கவனித்து வருகிறது. சர்ப்ராஸ் கான் எப்படி செயல்பட்டு வருகிறார் என்பதை எப்படி நாங்கள் கவனிக்காமல் இருப்போம். உண்மையில் அவர் எடுக்காததற்கு காரணம், சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கு அவரது உடல்தகுதி இல்லை. இதை பரிசோதித்த பிறகே அப்படிப்பட்ட முடிவை எடுத்தோம்.
அதன்பிறகு மைதானத்திற்கு வெளியே சக வீரர்களிடம் சர்ப்ராஸ் கான் நன்னடத்தையும் ஒழுக்கத்திற்கு மாறாக இருக்கிறது. இதுவும் அவரை எடுக்காததற்கு ஒரு காரணம். பிசிசிஐ தேர்வுக்குழு நேரடியாக வீரர்கள் பேட்டிங், பவுலிங் மட்டுமே வைத்து எடுத்துவிடாது. மற்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பல கோணங்களில் உறுதி செய்தபின்பே அணியை தேர்வு செய்கிறோம்.” என்று தெரிவித்தார் பிசிசிஐ அதிகாரி.