இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி..? மனம் திறக்கும் ரிஷப் பண்ட்
தனது டெஸ்ட் பயணத்தை சிக்ஸருடன் துவங்கியது எப்படி என்ற ரகசியத்தை ரிஷப் பண்ட் ஓபனாக தெரிவித்துள்ளார்..
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் மூன்றாவது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளிலும் 0, 20, 1, 0 என ரன் எடுத்த அவருக்கு பதிலாக அறிமுக வீரராக ரிஷப் பன்ட் அறிமுக வீரராகச் சேர்க்கப்பட்டார்.
முதல் போட்டியில் களமிறங்குகிறோம் என்ற பயம், பதட்டம் எதுவும் இல்லாமல் களமிறங்கிய ரிஷப் பண்ட், தான் சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்ஸருக்கு விரட்டி மாஸ் காட்டினார்.
இந்த ஒரே ஒரு சிக்ஸர் மூலம் சில சாதனைகளையும், பலரின் பாராட்டுக்களையும் பெற்ற ரிஷப் பண்ட் தான் சிக்ஸர் அடித்ததன் ரகசியத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரிஷப் பண்ட் கூறியதாவது; “தூக்கி அடிப்பதற்கு சரியாக பந்து வரும் பட்சத்தில் அதனை சிக்ஸருக்கு விரட்ட தயங்க கூடாது. முதல் பந்தாக இருந்தாலும் அப்படி தான் விளையாடி இருப்பேன். என்னை நோக்கி வந்த அந்த பந்தை சரியாக கணித்து நிதானமாகவே அந்த ஷாட்டை அடித்தேன்.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வது கூட மிக கடினமானவது என்பதை உணர்ந்து கொண்டேன். நம்மை நோக்கி வரும் பந்துகளை கூட சரியாக கணித்து பிடிக்க முடியாத அளவிற்கு மைதானத்தின் தன்மை மாறிகொண்டே இருக்கும். இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டியில் பும்ராஹ், அஸ்வின், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் பலர் அபாரமாக விளையாடினர் இதன் காரணமாகவே எங்களால் ஈசியாக வெற்றி பெற முடிந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிப்போம்” என்றார்.,