உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா அவருக்கு பந்து வீசுவதை இப்போது நினைக்கும் போதே மிகவும் பயமாக இருக்கிறது என இலங்கை அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா ஆடுவதை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது இதில் சர்ச்சைகளில் சிக்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் இருவரும் இடம் பெறுவார்களா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இரு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கே எல் ராகுல் இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக துவங்கினாலும், அதன்பிறகு சிறப்பாக ஆடி இதுவரை நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், ஒரு சதமும் அடித்துள்ளார். அதேபோல ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக ஆறாவது வீரராக களமிறங்கி பந்தை பவுண்டரிகளாக விளாசுகிறார். சென்னை அணிக்கு எதிராக 8 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். அதேபோல பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19வது ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த ஆட்டத்தில் அவர் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். பந்துவீச்சிலும் இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்த சக மும்பை அணி வீரர் லசித் மலிங்கா கூறியதாவது, “இவரது அசுரத்தனமான ஆட்டம் எனக்கு பயத்தை அளிக்கிறது. உலக கோப்பையில் இவருக்கு எப்படி பந்து வீசுவது என இப்போது நினைத்தாலே பயம் தொற்றிக் கொள்கிறது” என்றார்
"I am scared to bowl to @hardikpandya7 at the World Cup." – Lasith Malinga#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians #MIvRCB #CWC19 pic.twitter.com/wMy3JGnh9S
— Mumbai Indians (@mipaltan) April 16, 2019