இங்கிலாந்தை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஸ்காட்லாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அசால்டாக அடித்து வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பிய ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.
அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பிளங்கெட் ஆகியோர் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதன்பின், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
பேர்ஸ்டோவ் தனது அதிரடியை காட்டினார். அவர் 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார். மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், லியாம் பிளங்கெட் தனியாக நின்று போராடினார். கடைசி 2 ஒவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரின் முதல் பந்தில் அதில் ரஷித் ரன் அவுட்டானார். அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் பெறப்பட்டது. ஐந்தாவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிளங்கெட் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் அசால்டாக வீழ்த்திய ஸ்காட்லாந்து அணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
Cricket has all the ingredients to become a global game. Teams with massive potential like, Afghanistan, Ireland, Scotland along with many others have to be given more opportunities to play against the more experienced teams. Best way to provide great exposure. #SCOvENG
— Sachin Tendulkar (@sachin_rt) June 10, 2018
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஸ்காட்லாந்து அணியை பாராட்டி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரும் ஸ்காட்லாந்து அணிக்கு தனது வாழ்த்தை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.