ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது உலக கோப்பை கால்பந்து ஆகும். ஒலிம்பிக்கை போலவே இந்தப் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் அடுத்தாண்டு ஜூன் – ஜூலை மாதங்களில் நடக்கிறது. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ரஷியா நேரடியாக தகுதி பெற்றது. மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறும். தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், செனகல் அணியும் மோதின. இப்போட்டியில், செனகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செனகல் அணியின் தியாஃப்ரா சாகோ 12-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்காவின் தம்சன்கா மிகிசே எதிர் அணியினருக்கு ஒரு கோல் போட்டுக்கொடுத்தார். இந்த வெற்றியை தொடர்ந்து செனகல் அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இது செனகல் அணி பங்கேற்க இருக்கும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டியாகும். முன்னதாக 2002-ம் ஆண்டு ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுவரை செனகல் அணி தகுதி பெற்றிருந்தது.
2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நாடுகள் விவரம்:-
ரஷியா (போட்டியை நடத்தும் நாடு), பிரேசில், ஈரான், ஐப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென் கொரியா, சவுதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜிரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல்.
இதுவரை 24 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 8 நாடுகள் தகுதி பெற வேண்டும்.