சென்னை அணி வெற்றிகளை குவிக்க இவர்களே காரணம்; பயிற்சியாளர் சொன்ன பளீச் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருவதற்கு அணியில் இவர்கள் இருப்பதே காரணம் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. இறுதியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டதால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி கிடைக்காததால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மொத்தம் 53 நாட்கள் இந்த ஐபிஎல் தொடர் நடக்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்தது. போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அதுவும் விரைவில் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
கொரோனா பரிசோதனை, பயிற்சி அனைத்தும் இருப்பதால் ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே இந்திய வீரர்கள் துபாய்க்கு செல்லவிருக்கின்றனர். வருகிற ஆகஸ்ட் 20ம் தேதிக்கு மேல் துபாய் செல்ல இருப்பதாக அனைத்து அணி நிர்வாகங்களும் தெரிவித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்திய வீரர்களுக்கு துபாய் செல்வதற்கு முன்பாக சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் இருக்கும் என சிஎஸ்கே அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமிற்கு லட்சுமிபதி பாலாஜி தலைமை தாங்க உள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லட்சுமிபதி பாலாஜி கூறுகையில், “சென்னை அணியில் சீனியர் வீரர்கள் இருப்பது அணிக்கு மிகவும் பலமாக இருக்கிறது. இவர்கயி அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியிருக்கிறார்கள். சென்னை அணி இம்முறை கோப்பையை வெல்வதற்கு சீனியர் வீரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயிற்சி முகாம் துவங்க இருப்பதால் வீரர்களுக்கு குறிப்பாக சீனியர் வீரர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும். ஆனால் அவர்கள் அனுபவம் கொண்டிருப்பதால் இதில் இருந்து எப்படி மீண்டு வந்து இயல்பு நிலைக்குத் திரும்புவது என நன்கு அறிவர். சென்னை அணியில் சீனியர் வீரர்கள் இருக்கும் வரை சென்னை அணிக்கு எப்போதும் வெற்றி தான்.” என நம்பிக்கை தரும் விதமாக லட்சுமிபதி பாலாஜி பேசினார்.