பல ஜாம்பவான்களின் ஆட்டத்தை நான் நேரில் பார்த்துவிட்டேன். ஆனால் நான் பார்த்ததிலேயே இதுதான் சிறந்த ஆட்டம் என்று வானுயர புகழ்ந்திருக்கிறார் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்.
அகமதாபாத்தில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தமிழக வீரர்கள் சாய் சுதர்சன்(53) மற்றும் விஜய் சங்கரின்(63) அபாரமான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் குவித்தது.

205 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மூன்றாவது விக்கெட்டில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் ஜோடி சேர்ந்து 55 பந்துகளில் 100 ரன்கள் குவித்து மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி கடைசி நான்கு ஓவர்களில் 50 ரன்கள் அடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது உள்ளே வந்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கொல்கத்தா அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் ரஷித் கான்.

அதன் பின்னர் உள்ளே இருந்த ரிங்கு சிங், கடந்த ஆண்டு லக்னோ அணிக்கு எதிராக செய்துகாட்டிய ஆட்டத்தை குஜராத் அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தி கடைசி இரண்டு ஓவர்களில் 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என்று மிரட்டினார்.
குறிப்பாக கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து கொடுத்தபிறகு, அடுத்தடுத்து ஐந்து சிக்ஸர்களை அடித்து வெற்றியை சிறப்பாகப் பெற்றுக்கொடுத்தார். இதனால் உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் விமர்சனர்கள் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரும் இவரை பாராட்ட தயங்கவில்லை. ட்ரெஸ்ஸிங் ரூமில் கொல்கத்தா அணியின் சக பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் அனைவரையும் அமரவைத்து ரிங்கு சிங் பாராட்டியுள்ளார் கொல்கத்தா பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். அவர் பேசியதாவது:

“கிட்டத்தட்ட 40 வருடங்களாக பல வீரர்கள் விளையாடியதை நேரில் பார்த்து வருகிறேன். என் மனதை பாதித்த இரண்டு ஆட்டங்கள் இருக்கின்றன. ஒன்று ரஞ்சிக்கோப்பையில் ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்தது. இரண்டாவது பாகிஸ்தான் வீரர் ஜாவத் மியாதத் கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தது. இரண்டும் என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.
அதைவிட சிறப்பான ஆட்டம் ரிங்கு சிங் விளையாடியது. வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த என்னை மிரள வைத்துவிட்டார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். மேலும் மிடில் ஓவர்களில் நித்திஷ் ரானா மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு இந்த வெற்றியை ஆரம்பத்தில் சாத்தியமாக்கி கொடுத்தார்கள்.” என்று பாராட்டினார்.
