ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் டெல்லி அணியின் முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ள ஷிகர் தவான், ஐ.பி.எல் தொடரின் முதல் சில போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பெங்களூரில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை பீல்டிங் செய்ய ஷிகர் தவண் முற்பட்டபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து ஷிகர் தவண் அழைத்துச் செல்லப்பட்டார், அவருக்கு பதிலாக யஜூவேந்திர சாஹல் பீல்டிங் செய்தார். இந்திய அணி பேட்டிங்கின்போதும் ஷிகர் தவண் களமிறங்கவில்லை.
இந்நிலையில், ஷிகர் தவணுக்கு மருத்துவமனையில் எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவரின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சில வாரங்கள் ஷிகர் தவண் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் ஷிகர் தவான் விலகினார். அவருக்கு பதிலாக ப்ரிதிவ் ஷா நியூசிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மார்ச் மாத இறுதியில் துவங்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் சில போட்டிகளிலும் ஷிகர் தவான் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் ஷிகர் தவான் ஓரிரு வாரங்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினாலும், அவர் டெல்லி அணிக்கு பின்னடைவை தரும் என்றே கருதப்படுகிறது.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி;
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து.கேப்டன்), பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் டூபே, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தகூர், கேதர் ஜாதவ்.