கடும் சோதனையில் சிக்கி தவிக்கும் விரக்திமான் சஹா
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பல மாதங்களாக அவதிப்பட்டு வரும் விக்கெட் கீப்பர் விரக்திமான் சஹா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய பல மாதங்கள் தேவைப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும், அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியும் கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது.

இதில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பண்டும் அணியில் இடம்பெற்றிருந்தனர், விரக்திமான் சஹா அணியில் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து சஹா இன்னும் குணமடையாததால் அவர் இங்கிலாந்து அணியுடனான தொடரில் பங்கேற்கவில்லை என்று பி.சி.சி.ஐ., அறிவித்தது.
இது தவிர ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வரும் சஹா முழுமையாக குணமடைய இன்னும் பல மாதங்கள் தேவைப்படும் என்று அங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்தே சஹாவுக்கு தோள்பட்டையில் வலி இருந்ததாகவும், சஹாவிற்கு ஏற்பட்ட காயம் ஐ.பி.எல் தொடர் முடிந்த பிறகே கணடறியப்பட்டு அதற்கு சிகிச்சை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும் சஹா முழுமையாக குணமடைய இன்னும் பல மாதங்கள் தேவைப்படும் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சஹாவிற்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் யாராவது ஒருவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் சஹாவால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவே முடியாத நிலையும் ஏற்படும் என்பது கவணிக்கப்பட வேண்டிய விசயம்.