திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இனி 4வது இடம் எனக்கு மட்டும் தான் – அசுர நம்பிக்கையில் கேப்டன்!
இந்திய அணியின் நான்காவது இடத்தை நான் நிரந்தரமாக பிடித்து விட்டேன் என நம்பிக்கை தரும் விதமாக இந்திய அணியின் நட்சத்திரமும் ஐபிஎல் டெல்லி அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி லிமிடெட் ஓவர்களில் நிலையான 4வது வீரர் இல்லாமல் கடந்த சில வருடங்களாக திணறி வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக அதற்கான சரியான தீர்வை அறிந்திட வேண்டும் என்ற நோக்கில் பல வீரர்களை பயன்படுத்தியும் பலனில்லாமல் போனது.
இறுதியாக, உலக கோப்பை தொடருக்கு நான்காவது இடத்திற்கு ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர்களை எடுத்துச் சென்றது. இருப்பினும் அது இந்திய அணிக்கு சற்று பலனளிக்கவில்லை.
இந்நிலையில் அந்த இடத்திற்கு மனிஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் ஒரு சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக நான்காவது இடத்திற்கு அடுத்தடுத்த தொடர்களில் அவர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் இந்திய அணியில் தற்போது தனது இடம் குறித்து பேட்டியளித்த அவர் கூறுகையில், “தேர்வுக்குழு என்னை இந்திய அணியில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதைப் பார்க்கையில் நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டேன் என நம்புகிறேன். இனிவரும் தொடர்களில் அந்த இடம் எனக்குத்தான் என நினைக்கிறேன்.” என நம்பிக்கையோடு பேசியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் உரையாடிய போது, அவர் மேலும் பேசுகையில், “தேர்வுக் குழுவிற்கு எனது ஆட்டம் திருப்தி அளித்ததால் அவர்கள் என்னை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என நம்புகிறேன். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் ஆடுவேன் என விடாப்பிடியாக நிற்பது தவறு. ஆட்டத்திற்கு ஏற்ப வேறு எந்த இடத்திற்கு மாற்றினாலும் அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.
கேப்டன் விராட் கோலி நான் தடுமாறிய போதெல்லாம் எனக்கு உதவி இருக்கிறார். தற்போதும் எங்களுடன் ஒரு கேப்டனாக அவர் பழகுவதில்லை. அவ்வபோது போதிய உதவிகளையும் செய்து சக வீரராக பார்க்கிறார்.” என்றார்