ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிய வந்திருக்கிறது. இதோடு மூன்று முன்னணி இந்திய வீரர்கள் பைனலில் இடம்பெறவில்லை என்பது கூடுதல் சோகத்தை தந்திருக்கிறது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் தொடர்ந்து நம்பர் 4 இடத்தில் களமிறங்கிவரும் ஷ்ரேயாஸ், இந்தாண்டு துவக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருந்தார் அதன்பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இந்த காயம் காரணமாக இடம்பெறவில்லை.
பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார் கடைசி டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று பீல்டிங் செய்துகொண்டிருந்த இவருக்கு மீண்டும் முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டது. உடனடியாக ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்ற இவருக்கு காயம் தீவிரவாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சில போட்டிகள் இருக்கமாட்டார் என்றும் கூறப்பட்டது. அதன்பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவர்கள் தரப்பில் இருந்து வெளிவந்த அறிக்கையில், அடுத்த 4-5 மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயரால் ஈடுபட முடியாது. முதுகுப்பகுதியில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவற்றில் இருக்கமாட்டார் என்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே இதேபோன்று முதுகுப்பகுதி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா, இம்மாதம் துவக்கத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் அடுத்த 8 மாதங்களுக்கு விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் அடுத்த 12 மாதங்களுக்கு இருக்க மாட்டார் என்றும் அனைவரும் அறிவோம். இப்படி முன்னணி வீரர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்து இந்திய அணியில் விளையாடாமல் இருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னுரே இந்திய அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறதா? எனும் எண்ணத்தை கொடுக்கிறது.