இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று தனது ஆணித்தனமாக தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.
சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் பாரம்பரியத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வீரர்கள் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்திருக்கின்றனர். சமகாலம் வரை அது தொடர்ந்து வருகிறது.
2000களுக்கு முன்பு சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருந்தார். அதன்பிறகு சச்சின் டெண்டுல்கர், அவருக்குபின் விராட் கோலி என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் இருந்திருக்கின்றனர்.
அடுத்த சூப்பர் ஸ்டாராக யார் வருவார் என்கிற கேள்விகளும் விவாதங்களும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அதில் சிலர் சுப்மன் கில் பெயரை குறிப்பிடுகின்றனர். ஏனெனில் சமீபத்தில் அவர் இருந்து வரும் பார்ம் மற்றும் அந்த பார்மை சதமாக மாற்றுவது, அணியின் வெற்றிக்கு இறுதிவரை நின்று உதவுவது என 23 வயதில் பொறுப்புடன் சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்தார். அதே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். இப்போட்டியில் 126 ரன்கள் அடித்து இந்திய வீரர்களின் மத்தியில் அதிகபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்தார்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் பங்கு பெற்றினர். அப்போது இவர்களிடம், யார் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்? அடுத்த ஐந்து வருடங்களில் யார் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு சற்றும் தயக்கமின்றி சுப்மன் கில் என்று ஹர்பஜன் சிங் பதில் கொடுத்தார். அவர் கூறியதாவது: “சுப்மன் கில் இந்த இளம் வயதிலேயே முதிர்ச்சியுடன் விளையாடி வருகிறார். நிச்சயம் அடுத்த ஐந்து வருடங்களில் இவர் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார். இந்திய அணியை வழிநடத்தும் அளவிற்கு உயர்வார்.” என்றார். இர்பான் பதானும் கில் பெயரை குறிப்பிட்டார்.
இவர்கள் பதிலில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டு, பிரிதிவி ஷா பெயரை குறிப்பிட்டார் வீரேந்திர சேவாக். ” 24 வயது தான் ஆகிறது இவருக்கு. விரைவில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்டாராக அவர் வருவார்.” என்று கூறினார்.