சர்வதேச இந்திய அணிக்காக ஆடுவது எப்படி இருக்கிறது? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இளம் வீரர் சுப்மன் கில்.
அண்டர் 19 உலக கோப்பையில் அதிக ரன் குவித்ததால், சுப்மன் கில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது சர்வதேச இந்திய அணியில் இடம் பிடித்தார்.
அத்தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட வைக்கப்பட்டாலும் பெரிதளவில் ரன் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணியில்தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
அதன்பிறகு இந்தியா ‘ஏ’ அணிக்காகவும், உள்ளூர் போட்டிகளிலும் ரன்கள் அடித்து துவம்சம் செய்ததில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தது டெஸ்ட் அணியில் தான்.
இதுவரை ஒரு போட்டியில் கூட கவலைப்படாமல் இருந்தாலும், முன்னணி ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். இதனால் எந்நேரமும் இவர் உள்ளே எடுக்கப்பட்டு ஆட வைக்கப்படலாம்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுபமன் கில், “இதுவரை உங்களை ஆடும் லெவனில் எடுக்கவில்லை. இதுகுறித்து உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?” என்று நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பதில் அளித்ததாவது:
என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்தியா ஏ மற்றும் உள்ளூர் தொடர்களிலும் என்னுடைய ஆட்டத்தில் வேகம் காட்டி, கடின உழைப்பின் மூலம் ரன்கள் அடிக்க முயற்சி செய்கிறேன்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் முன்னணி ரிசர்வ் வீரராக இருப்பதால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகின் நம்பர் 1 அணியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இது எனக்கு சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கிறது.
தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மூலம் எனக்கு நிறைய அனுபவம் கிடைக்கிறது. அவர் எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பதை நன்கு கவனித்து தெரிந்து வருகிறேன் என்றார்.