உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவை குறை கூறாதீர்கள், காரணம் இன்னொரு இந்திய வீரர் என்கிறவாறு தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் சவுரவ் கங்குலி.
இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு சென்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து இருந்தபோது, கடந்த முறையை போலவே இம்முறையும் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது.
ஆனால் இம்முறை போட்டியின் முதல் நாளிலிருந்து ஆட்டம் எதிரணியின் கைக்கு சென்றது. இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா தான் இந்த தோல்விக்கு காரணம் என்று பலரும் சாடி வருகின்றனர். ஏனெனில் டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்ததில் துவங்கி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பவுலரை பிளேயிங் லெவனில் எடுக்காதது வரை பல தவறுகள் அவர் மூலம் நடந்திருப்பதால் அப்படி பேசப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது சமீபத்திய பேட்டியில் ரோகித் சர்மா இதற்கு காரணம் இல்லை, மற்றொரு இந்திய வீரர் தான் என்கிறவாறு பேசியது பலரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்திருக்கிறது. கங்குலி பேசியதாவது:
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி முதலில் பவுலிங் எடுத்த முடிவில் எந்தவித தவறும் இல்லை. ஆரம்பத்தில் பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தது. ஆகையால் அந்த முடிவை எடுத்தார். இந்திய அணி துவக்கத்தில் நன்றாக செயல்பட்டது. ஆனால் ஸ்மித் உள்ளே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்கு சரியான லைன் மற்றும் லென்த்தில் முகமது சிராஜ் வீசவில்லை. பல பந்துகளை எளிதாக அடிக்கும் வகையில் போட்டுக் கொடுத்துவிட்டார். இந்த இடத்தில் ஸ்மித் தன்னுடைய விக்கெட் இழக்காமல் நின்று கொண்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது.
முதல் இன்னிங்சில் ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் அடித்த ஸ்கோர் இந்திய அணிக்கு மிகப்பெரிய வித்தியாசமாக மாறிவிட்டது. கடைசியில் அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் ஸ்கோர் தான் இந்திய அணியின் தோல்விக்கான வித்தியாசமாகவும் அமைந்தது தெளிவாக தெரிகிறது.” என்றார்.