அந்த இரண்டு பேருக்கும் அணியில் இடம் கிடைக்க வேண்டும்; சவுரவ் கங்குலி சொல்கிறார்
டி.20 போட்டிகளில் மீண்டும் குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலிருந்தே தொடங்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகிய இருவருமே இல்லை. வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம்பெற்றிருந்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் குல்தீப்-சாஹல் ஜோடி ஓரங்கட்டப்பட்டது. டி20 அணியில் பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதாக கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

மற்ற அணிகள் 9-10ம் பேட்டிங் ஆர்டர் வரை டெப்த்தை பெற்றிருக்கும் நிலையில், இந்திய அணியிலும் பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் வகையில், பேட்டிங் தெரிந்த க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், குல்தீப் – சாஹல் ஆகிய இருவரையும் மீண்டும் டி20 அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கங்குலி எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியில் இரண்டு இடது கை ஆஃப் ஸ்பின்னர்கள் தேவையில்லை. எனவே குல்தீப்-சாஹலை மீண்டும் டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

க்ருணல் பாண்டியா, ஜடேஜா ஆகிய இருவரும் இடது கை ஆஃப் ஸ்பின்னர்கள். பேட்டிங் ஆடக்கூடியவர்கள் என்பதால் இருவருமே அணியில் உள்ளனர். இந்நிலையில் தான் இரண்டு இடது கை ஆஃப் ஸ்பின்னர்கள் தேவையில்லை என்றும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.