வீரர்கள் பயிற்சியை துவங்க அனுமதி கொடுத்த கிரிக்கெட் வாரியம்; அடுத்த தொடர் யாருடன்? முழுவிவரம் இதோ..
கிரிக்கெட் பயிற்சிகளை துவங்க தென்னாபிரிக்க வீரர்களுக்கு அதன் கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபிஎல் தொடரும் நடக்கவில்லை.

கடைசியாக, பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடக்கவிருந்த ஒருநாள் தொடரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு தென்ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் நாடு திரும்பினர். தற்போது வரை எவ்வித போட்டிகளும் இந்தியாவில் நடக்கவில்லை.
இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால், ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி முகாம் துவங்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கிலாந்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் இங்கிலாந்து வீரர்கள் ஜூன் மாதம் தொடக்கம் முதலே பயிற்சியை தொடங்கி விட்டனர். ஜூலை மாதம் எட்டாம் தேதி இங்கிலாந்து மற்றும் விண்டீஸ் இரு நாடுகளுக்கும் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவிருக்கிறது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரும் நடக்கவிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இன்று வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கினர்.
தென்னாபிரிக்காவிலும் மெல்லமெல்ல கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால், தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து அதை உறுதி செய்த பின்னர் மீண்டும் பயிற்சியை வீரர்கள் துவங்கலாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் விளையாட்டு அமைச்சகம் கொடுத்த அறிவிப்பிற்கு பிறகு, இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கும் நோக்கில் இந்த பயிற்சி தொடங்கப்பட உள்ளது.