டி.20 தொடர் எங்களுக்கு தான்; தென் ஆப்ரிக்கா வீரர் நம்பிக்கை
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி.20 போட்டியில் வெற்றி பெற்று டி.20 தொடரை கைப்பற்றுவோம் என்று தென் ஆப்ரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் பெஹர்தீன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்ரிக்கா அணியின் ஆல் ரவுண்டரும், கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டருமான பெஹர்தீன், கடைசி போட்டியில் வெற்றி பெற்று டி.20 தொடரையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெஹர்தீன் கூறியதாவது “இந்திய அணியுடனான கடைசி டி.20 போட்டியிலும் வெற்றி எங்களுக்கே. இந்த போட்டியில் ஒருவேளை குல்தீப் யாதவ் களமிறங்கினாலும், அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் எங்களிடம் வியூகங்கள் உள்ளன. குல்தீப் யாதவ் பந்து வீச்சை எங்களால் நம்பிக்கையுடன் ஆட முடியும். அவரது பந்து வீச்சில் நாங்கள் முதலில் திணறினோம். தற்போது எங்களால் அவரது பந்து வீச்சை சமாளிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.