விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி ஹசீம் ஆம்லா முதலிடத்தை பிடித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ஹசிம் அம்லா (108), வான் டெர் டஸ்சன் (93), ஹென்ரிக்ஸ் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது.

பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரரான பகர் சமான் 25 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 86 ரன்கள் குவித்தார். பாபர் ஆசம் 49 ரன்கள் அடித்தார்.
அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 63 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி டர்பனில் நாளைமறுதினம் (22-ந்தேதி நடக்கிறது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்த ஹசீம் ஆம்லா, மிக குறைந்த போட்டிகளில் 27 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த இன்னிங்ஸில் 27 சதம் அடித்த வீரர்கள் பட்டியல்;
ஹசீம் ஆம்லா – தென் ஆப்ரிக்கா – 167 இன்னிங்ஸ்
விராட் கோஹ்லி – இந்தியா – 169 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் – இந்தியா – 254 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் – ஆஸ்திரேலியா – 308 இன்னிங்ஸ்
சனத் ஜெயசூர்யா – இலங்கை – 404 இன்னிங்ஸ்