என் கனவு நிறைவேறிடுச்சு… மகிழ்ச்சியில் புதிய சென்னை சிங்கம் நிகிடி
தோனியுடன் ஒன்றாக விளையாட வேண்டும் என்பது தன்னை போன்ற இளம் வீரர்கள் ஒவ்வொருவரின் கனவு என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தென் ஆப்ரிக்கா வீரர் நிகிடி தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் தனது சர்வதேச டெஸ்ட் பயணத்தை துவங்கிய நிகிடி, ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறித்ததன் மூலம் ஒட்டுமொத்த உலக ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறினார்.
இதற்கு பயனாக ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிகிடியை 50 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியுடன் ஒன்றாக விளையாட உள்ளது குறித்து நிகிடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிகிடி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் நான் இடம்பெறுவேன், என்னை ஒரு அணி விலை கொடுத்து வாங்கும் என்று நினைக்க கூட இல்லை. ஆனால் இது குறித்தான பரபரப்பு எனது மனதில் ஏலம் நடைபெற்ற அன்றைய தினத்தில் இருந்து கொண்டே இருந்தது. இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் ஐ.பி.எல் ஏலத்தை டி.வி.,யில் பார்க்க முடியவில்லை. போட்டி முடிந்த பின் எனது செல்போனை எடுத்து பார்க்கும் போது, ஏராளமான வாழ்த்து செய்திகள் குவிந்திருந்தன. அப்போது தான் எனக்கு தெரியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தது. தோனியுடன் ஒன்றாக விளையாட வேண்டும் என்பது என்னை போன்ற ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.