17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் மாலி அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவிமும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது.
மாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 19-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் அபெல் ருயிஸ் முதல் கோல் அடித்தார். அடுத்து 43-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அபெல் ருயிஸ் கோலாக மாற்றினார். இதன்மூலம் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஃபெரான் ஒரு கோல் அடித்தார். அடுத்து 74-வது நிமிடம் மாலி அணியின் தியாயே ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி, பிரேசில் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வருகிற 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகளும், மூன்றாம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் மாலி – பிரேசில் அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.