இந்தியா இலங்கை இடையேயான முதல் டி.20 போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் இன்று துவங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரர்களாக வழக்கம் போல் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரே களமிறங்குவார்கள் என தெரிகிறது.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோருடன் மணிஷ் பாண்டேவிற்கும் இடம் கொடுக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து சொதப்பி வருவதால் ரசிகர்களின் கடும் விமர்ச்சனத்தை சந்தித்து வரும் மணிஷ் பாண்டே டி.20 தொடரிலும் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணியில் இருந்து முழுமையாக ஓரங்கட்டப்படுவார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ரூணல் பாண்டியா ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என தெரிகிறது.
வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இடம் கிடைக்கும். அதே போல் சுழற்பந்து வீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருடன் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி அறிமுக வீரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி.