பேட் கம்மின்ஸ் ஒருநாள் தொடருக்கும் வரமாட்டார் என தெரிய வந்திருப்பதால், ஒருநாள் தொடரின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்று ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி, முதற்கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-1 என டெஸ்ட் தொடரை வென்று, பார்டர் கவாஸ்கர் டிராபியை தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்து வந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு சொந்த காரணங்களுக்காக அவர் ஆஸ்திரேலியா சென்றார். இதனால் 3வது டெஸ்ட் போட்டியின்போது ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். 4வது டெஸ்ட் போட்டியின்போதும் கம்மின்ஸ் வரவில்லை என்பதால், தொடர்ந்து ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.
கம்மின்ஸ் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதால் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருக்கிறார் என்று பின்னர் தகவல்கள் வந்தது. துரதிஷ்டவசமாக, நான்காவது டெஸ்ட் போட்டியின்போது கம்மின்ஸ் தாயார் இறந்து விட்டார் என்ற சோகமான செய்தியும் வெளிவந்தது. இதனால் தான் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பேட் ம்மின்ஸ் பங்கேற்கவில்லை.
தற்போது வரை தனது தாயாரின் மறைவில் இருந்து மீள முடியாத பேட் கம்மின்ஸ் இருக்கிறார் என்றும், இதனால் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் நன்றாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித், தொடர்ந்து ஒருநாள் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பேட் கம்மின்ஸ்-க்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் அந்த அறிவிப்பு வெளியிடப்படும், மாற்று வீரர் விரைவில் ஆஸ்திரேலிய அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுசி., சஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். (ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படும்)
ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி
சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா. (கம்மின்ஸ்-க்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படும்)