“இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. ஹெட்டிங்கிலே மைதானத்தின் நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்துவிட்டார் பென் ஸ்டோக்ஸ்.” என்று பேட்டியில் பகிர்ந்து கொண்டார் ஆட்டநாயகன் ஸ்டீல் ஸ்மித்.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 325 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கி, 279 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி 45/4 என சரிவில் இருந்தபோது பென் டக்கட்(83), பென் ஸ்டோக்ஸ் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். 9 சிக்ஸ், 9 பவுண்டரிகள் என 155 ரன்கள் விளாசி இறுதிவரை போராடினார் பென் ஸ்டோக்ஸ். இறுதியில் 327 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. 3ஆவது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் 6ஆம் தேதி துவங்குகிறது.
முதல் இன்னிங்சில் 110 ரன்கள் மற்றும் பீல்டிங்கில் மொத்தம் ஆறு கேட்ச்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:
பென்ஸ் ஸ்டோக்ஸ் சற்று கிறுக்குத்தனமான பிளேயர். அசாத்தியமான வீரர். 2019 ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது மீண்டும் நடந்துவிடுமோ என்கிற எண்ணத்தை கொண்டுவந்துவிட்டார். தனக்கு இருக்கும் திறமையை வைத்து எந்த போட்டியையும் தன் பக்கம் ஈர்த்துவிடுவார். டெஸ்டில் மட்டுமல்ல, மூன்று விதமான போட்டிகளிலும் இதை அவர் செய்து காட்டியிருக்கிறார்.
ஒரு பக்கம் நின்று கொண்டு அவர் ஆடிய விதம் எங்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அவரை வீழ்த்தி போட்டியையும் வெற்றி பெற்றுவிட்டோம். இது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
அவரது கேட்ச்சை தவறவிட்டது சற்று கடினமாக இருந்தது. ஸ்கொயர் திசையில் நின்று கொண்டு அவர் அடித்த வேகத்தில் சரியாக கணித்து பிடிப்பது என்பது கடினமான செயலாக இருந்தது. கடைசியில் அது மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது.
முதல் இன்னிங்ஸில் நாங்கள் பௌலிங் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம். துரதிஷ்டவசமாக நாங்கள் பேட்டிங் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது மிகப் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்வோம் என்று பிளானோடு வந்தோம். பிளான் செய்ததைப் போல ரன்குவிப்பில் ஈடுபட்டோம். அதற்கு நான் பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இரு அணிகளும் மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். பார்வையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். கடைசியில் நாங்கள் ஒருபடி அதிகமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் பலனாக பெற்றது தான் இந்த வெற்றி என்று பார்க்கிறேன்.” என ஸ்மித் பேசி முடித்தார்.