இதெல்லாம் சகஜம் தான்; ஆஃப்கானிஸ்தான் வீரருக்கு ஆறுதல் கூறும் ஸ்டூவர்ட் பிராட்
ஆப்கான் கிரிக்கெட் பெரும்பாலும் முகாம்களில் வளர்ந்து சர்வதேச அளவுக்கு உயர்ந்தது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளையும் பின்னுக்குத் தள்ளி மே.இ.தீவுகளுக்கு டஃப் ஃபைட் கொடுத்து உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.
அந்த அணி உலகம் முழுதும் பிரபலமானதில் ரஷீத் கானுக்கு முதலிடம், அதன் பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஷஸாத் ஆகியோர்களாவார்கள். குறிப்பாக ரஷீத் கான் டி20 லீகுகளில் உலகம் முழுதும் பெரிய ஹிட்டர்களால் கூட எளிதில் அடிக்க முடியாத ஒரு பவுலராகத் திகழ்ந்தார்.
இந்த உலகக்கோப்பையில் ரஷீத் கானை முன் வைத்துத் தான் ஆப்கான் அணியின் வாய்ப்புகள் பற்றி குறைவாகவேனும் பேசப்பட்டு வந்தது. இந்த உலகக்கோப்பைக்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற தரநிலையில் அடியெடுத்து வைத்தார். ஆனால் இந்த எண்ணிக்கைகள் பெரும்பாலும் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரானது என்பதை பலரும் அறிவார்கள்.
ஆனால் எண்ணிக்கையையும் கடந்து ரஷீத் கானின் பந்துகளின் தினுசுகள் பெரிய ஆச்சரியம், அவரது பிளைட், வேகத்தில் செய்யும் சூட்சம மாற்றங்கள், பந்து காற்றில் வரும் திசையும் பிறகு பிட்ச் ஆன பிறகு செல்லும் திசையும், பிளைட், ட்ரிஃப்ட், கூக்ளி, நேர் பந்துகள், என்று உலகின் தலை சிறந்த பேட்ஸ்மென்களையும் அச்சுறுத்தக்கூடியது என்பது நிபுணர்கள் கருத்தாகும்.
நேற்றைய ஆட்டத்தின் 35வது ஓவரில் 199/2 என்று இருந்தது இங்கிலாந்து. இயன் மோர்கன் 24 பந்துகளில் 26 ரன்கள் என்று இருந்தார் ஆனால் அடியைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே என்ற அவரது நோக்கத்தில் தெளிவாக இருந்தார் மோர்கன். ஆனால் 28 ரன்களில் அவர் இருந்த போது ரஷீத் கானின் அருமையான கூக்ளியை ஸ்லாக் ஸ்வீப் செய்யும் போது சரியாகச் சிக்கவில்லை. டீப் மிட்விக்கெட்டுக்குப் பந்து சென்ற போது அங்கு பீல்டர் தவலத் ஸத்ரான் சரியானன் இடத்தில் இல்லாமல் சற்று முன்னால் இருந்தார். அவர் கையில் பட்டு பந்து பவுண்டரியானது. கேட்ச் கோட்டை விடப்பட்டது, ரஷீத்கானின் இதயம் நொறுங்குமாறு அடுத்த பந்து மிகப்பெரிய சிக்ஸ். இதுதான் ரஷீத் கானை மோர்கன் அடித்த 7 சிக்சர்களின் முதல் சிக்ஸ்.